மதிமுக தொண்டர் அணி தம்பிகள் மூவர் சாலை விபத்தில் அகால மரணமடைந்த செய்தியறிந்து ஆறாத துயரில் தவிப்பதாக அக்கட்சியின் முதன்மை செயலாளரும், எம்.பியுமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்
மதுரை மாநகர் மாவட்டக் கழக தொண்டர் அணி நிர்வாகிகளான தம்பிகள் பச்சைமுத்து, அமிர்தராஜ், புலி சேகர் ஆகிய மூவரும் இன்று அதிகாலை வாகன விபத்தில் அகால மரணம் அடைந்தார்கள் என்றத் தகவல் அறிந்தபோது துடிதுடித்துப் போனேன். கழகப் பொதுக்குழுவில் பங்கேற்றுவிட்டு ஊருக்குத் திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டிருப்பது மனதிற்கு கூடுதல் வலியை தருகின்றது.
இந்த மூன்று தம்பிகளும் என் குடும்பத்தில் ஒருவராகவே பழகியவர்கள். அண்ணன் புதூர் பூமிநாதன் அவர்களின் குடும்பத்திலும் ஒருவராகவே வளர்ந்தவர்கள். எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பார்கள். பழக்க வழக்கங்களிலும் ஒழுக்கமுடன் இருக்கக் கூடிய தம்பிகள்.
இவர்களது இழப்பு கட்சிக்கு மட்டுமல்ல. அவர்களின் குடும்பத்திற்கும் தாங்க முடியாத பேரிழப்பு. அனைவருமே இளம் வயது தம்பிகள். இன்னும் பல ஆண்டுகாலம் வாழ வேண்டியவர்கள். தன் தந்தையை இழந்து நிற்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைக்கும் போது மனம் பதறுகிறது.
இந்த சமூகச் சூழல் மோசமானதாக இருக்கிறது. ஏமாற்று, சூது, வஞ்சகம் நிறைந்த உலகம் இது. இப்படிப்பட்ட நிலையில் இவர்களின் குடும்பங்கள் ஒரு ஆண் துணையில்லாமல் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் பெரும் இழப்பை இவர்களது குடும்பம் சந்தித்து இருக்கிறது. இனி அந்தக் குடும்பங்களின் பாதுகாப்பிற்கே உத்திரவாதம் இல்லையே?
Also Read : பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா..!!
மதுரைக்கு சென்றாலே என்னை வரவேற்க அண்ணன் பூமிநாதன் அவர்களோடு இவர்கள் தானே சிரித்த முகத்தோடு உடன் நிற்பார்கள். தென் மாவட்ட சுற்றுப் பயணங்களில் முழுமையாக எப்போதும் என்னுடன் வருவார்கள். எப்போதும் என்னை சுற்றியே நிற்பார்கள். கழக முக்கிய நிகழ்வுகளிலும் என்னோடு இருப்பார்கள்.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் நான் களம் கண்டபோது முப்பது நாட்களாக இந்த மூவரும் திருச்சியில் தங்கியிருந்து எனக்காக பணியாற்றினார்கள். பல நேரங்களில் நள்ளிரவு தாண்டி நான் அறைக்கு வந்து இரவு உணவு சாப்பிட்ட பிறகு தான் இவர்கள் மூவரும் அங்கிருந்து அவர்கள் தங்கியிருந்த அறைக்கு கிளம்புவார்கள். அதன் பிறகு தான் அவர்கள் சாப்பிடுவார்கள்.
தம்பி புலி சேகர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். அவரது ஆட்டோவில் தலைவர் படத்தையும், எனது படத்தையும் தான் வைத்திருப்பார். மதுரை மாநாட்டின் போது 70 கிலோமீட்டர் சுற்றளவிற்கு ஆட்டோவில் சென்று தன் கையாலேயே மாநாட்டு சுவரொட்டிகளை ஒட்டினார். சிவகாசி அருகே குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்வை நான் முன்னெடுத்தபோது மதுரையில் இருந்து விருதுநகர் வரை தன் ஆட்டோவில் பயணித்து அந்நிகழ்ச்சிக்கான சுவரொட்டிகளை ஒட்டினார்.
இந்த மூவரும் அதீத கட்சி உணர்வும், விசுவாசமும் கொண்டவர்கள். நேற்று மதியம் பொதுக்குழு முடிந்து மதிய உணவுக்காக நான் வீட்டிற்கு சென்றேன். வீடு வரை தொண்டர் படை தம்பிகள் உடன் வந்தார்கள். அப்போது, தம்பி பச்சைமுத்து அவர்கள் என்னிடம் நாங்கள் இங்கேயே காத்திருக்கிறோம் அண்ணா என்றார். இல்லை. நீங்கள் மண்டபத்திற்கு முதலில் சென்று உணவு அருந்துங்கள். நானே வந்துவிடுகிறேன் என அவரிடம் சொன்னேன்.
அதேப்போல நேற்று இரவும் நான் கிளம்பும்போது என் அருகில் வந்தார் தம்பி புலி சேகர். கடந்த வாரம் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக நான் டெல்லியில் வெளியுறவுத்துறை செயலாளரை (foreign secretary) நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன். அந்த நிகழ்வை குறிப்பிட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தம்பி தமிமுல் அன்சாரி அவர்கள் சுவரொட்டி ஒன்றை அடித்து இருந்தார். அந்த சுவரொட்டியை நீண்ட தூரம் ஆட்டோவில் பயணித்து தான் ஒட்டியதாக தம்பி புலி சேகர் அப்போது என்னிடம் சொன்னான். ஏற்கனவே இந்த செய்தியை புலி சேகர் எனக்கு வாட்ஸ்அப்பிலும் அனுப்பி வைத்துள்ளார். நான் அதை பார்க்கவில்லை என்பதால் என்னிடம் இத்தகவலை ஓடி வந்து சொன்னான்.
மாநாட்டு நிகழ்வுக்காக ஆட்டோவில் பயணித்து சுவரொட்டி ஒட்டுவது சரி. ஆனால் இதையே எல்லா நிகழ்வுகளுக்கும் செய்யாதீர்கள். நெடுஞ்சாலைகளில் ஆட்டோவில் சென்று போஸ்டர் ஒட்டுவது ஆபத்தானது என அவரிடம் அறிவுறுத்தினேன்.
அதன்பிறகு, எப்போது ஊருக்கு கிளம்புகிறீர்கள் எனக் கேட்டேன். நாளை காலை தான் கிளம்புகிறோம் என்றான். இரவு கிளம்புவதாக சொன்னால் நான் எப்போதும் அவர்களை அனுமதிப்பது இல்லை. கண்டிப்பாக செல்லக் கூடாது. இரவு தங்கி விட்டு செல்லுங்கள் என தடுத்துவிடுவேன் என்பதால் இப்படி பொய் சொல்லி விட்டு இரவே கிளம்பியிருக்கிறார்கள்.
என்மீது உயிராக இருப்பார்கள். என் பாதுகாப்புக்காக என்னை சுற்றி சுற்றியே வருவார்கள். உயிருக்கு உயிரான தம்பிகளை இழந்து விட்டேன்.
நான் அரசியலுக்கு வந்தபிறகு எத்தனையோ துக்கங்களை, இறப்புகளை எதிர்கொண்டு இருக்கிறேன். பலர் வயது மூப்பால், நோய்மையால் இறந்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட இழப்புகளைக் கூட ஓரளவு கடந்து வந்திருக்கிறேன்.
இவர்களின் மறைவை என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சி நிகழ்ச்சிக்காக வந்துவிட்டு ஊருக்கு திரும்பும்போது இப்படி ஒரு துயரம் நிகழ்ந்து விட்டதே என நினைக்கும்போது மனம் குற்ற உணர்வால் தவிக்கிறது. இவர்களின் இழப்புக்கு நாமும் ஒரு காரணமாகி விட்டோமே என மனம் துடிக்கிறது.
அந்தக் குடும்பங்களுக்கு நான் என்ன ஆறுதலை சொல்ல முடியும்?
என் டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டு, அந்த தம்பிகளின் உயிரற்ற உடல்களை காண கனத்த இயத்தோடும், கண்ணீரோடும் இன்று மதியம் 2 மணிக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் செல்ல இருக்கிறேன். அந்தக் குடும்பங்களின் துயரில் பங்கேற்கிறேன் என துரை வைகோ வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.