மதுரையில் அதிமுக மேற்கு தொகுதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே. ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, மகளிருக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பேசுவது சரியல்ல என்று அவர் தெரிவித்தார்.
அது அரசு வழங்கும் நிதி என்பதால், அதை அரசியல் பிரச்சாரத்தில் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறினார்.
அதிமுக–பாஜக கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்வது, அவரின் தேர்தல் தோல்வி அச்சத்தை வெளிப்படுத்துகிறது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த கூட்டணி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், கூட்டணியில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கையை மக்கள் முக்கியமாக கருதவில்லை என்றும், மத்திய அரசில் இருந்தபோது திமுகவுக்கு பாஜக ஏற்றதாக இருந்ததா என்று கேள்வி எழுப்பினார்.
பாஜக ஆட்சியில் நாடு முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், பிரதமர் மோடி செல்வாக்கு வாய்ந்த தலைவராக உள்ளார் என்றும் கூறினார்.
மேலும், நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்து கருத்து தெரிவித்த அவர், எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களின் பெருமை தனித்துவமானது என்றும், அதை பிறருடன் ஒப்பிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.
