தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது.
இதற்கான வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, அவர் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு முக்கிய தொகுதிகளில் களமிறங்குகிறார்.
இந்த நிலையில், விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட தகவலின்படி, மார்ச் 30ஆம் தேதி சென்னை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பெரம்பூரில் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை, பின்னர் கொளத்தூரில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை, தொடர்ந்து வில்லிவாக்கத்தில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை பிரசாரம் நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது.
மேலும், சென்னை நகரின் பிற பகுதிகளிலும் பிரச்சாரம் நடத்த அனுமதி பெறும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
பிரசார கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களால் தேவையற்ற கூட்டநெரிசலை தவிர்க்க சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரசாரத்தில் விஜய், பெரம்பூரில் தன்னுக்காகவும், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனாவிற்காகவும், கொளத்தூரில் வி.எஸ். பாவிற்காகவும் வாக்கு சேகரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
