India

“தவெகவில் இணைவாரா?” – சி.வி. சண்முகத்தை சுற்றி சூடுபிடிக்கும் அரசியல்!

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்பி வேலுமணி அணிகள் மீண்டும் ஒன்றிணைந்தாலும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் இன்னும் தெளிவான முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், எஸ்பி வேலுமணி தலைமையிலான மற்றொரு அணியும் தனித்தனியாக செயல்பட்டன. இரு தரப்பினரும் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவி குறித்து சபாநாயகரிடம் தனித்தனி மனுக்களை அளித்தனர்.

இதற்கிடையில், தவெக ஆதரவு நிலைப்பாடு எடுத்ததாக கூறப்பட்ட எஸ்பி வேலுமணி அணியை எதிர்த்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்தது. அதேபோல், வேலுமணி தரப்பும் பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

பின்னர், எஸ்பி வேலுமணி அணியில் இருந்த சில எம்எல்ஏக்கள் மீண்டும் ஈபிஎஸ் அணியில் இணைந்தனர். ஆனால் சிலர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட அழுத்தத்திற்குப் பிறகு, ஈபிஎஸ் மற்றும் எஸ்பி வேலுமணி அணிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் ஒன்றிணைந்தன.

இதனைத் தொடர்ந்து, சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட மனுக்களையும் திரும்பப் பெற்றனர். எஸ்பி வேலுமணியும், கட்சிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் சரியாகிவிட்டதாக தெரிவித்தார்.

ஆனால், சி.வி. சண்முகம் இன்னும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்காதது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், அவர் அதிமுகவில் தொடர்வாரா அல்லது தவெகவில் இணைவாரா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *