தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழ்நிலை மாற்றமடைந்துள்ளது. 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதற்கிடையில் திமுகவும் தனது சட்டமன்றக் கட்சித் தலைமையை அமைத்துள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், முக்கிய முடிவுகளை எடுக்கத் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
மேலும் திமுக சட்டமன்றக் கட்சியின் புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக கே.என். நேரு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் கொறடாவாக எ.வ. வேலு நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பை முன்னிட்டு இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
