திருவண்ணாமலைக்கு சாமி தரிசனத்திற்கு வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு எதிராக நடந்ததாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை வழக்கை விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் காவலர்கள் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும், பாலியல் குற்ற வழக்குகளில் விரைந்து நீதி வழங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும், நீதிமன்ற வசதிகள் மற்றும் தடயவியல் ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை தினந்தோறும் விசாரித்து ஜூலை 31ஆம் தேதிக்குள் முடிக்க திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
