India

ஆந்திராவில் லாரி மீது பேருந்து மோதி விபத்து..-10 பேர் தீயில் கருகி உயிரிழப்பு- நடந்தது என்ன?

தெலங்கானா மாநிலத்தின் நிர்மல் பகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டம் விஞ்சமூரை நோக்கி 41 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று பயணம் செய்தது.

படுக்கை வசதியுடன் இயக்கப்பட்ட அந்த பேருந்தில் பெரும்பாலான பயணிகள் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அதிகாலை சுமார் 6 மணியளவில், பிரகாசம் மாவட்டம் மார்க்கபுரம் அருகிலுள்ள ராயவரம் பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

அந்த நேரத்தில் எதிர்திசையில் கனிகிரி பகுதியில் இருந்து சரளைக் கற்கள் ஏற்றிய டிப்பர் லாரி ஒன்று வேகமாக வந்தது.

சாலையின் வளைவில் இரு வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

மோதலின் தாக்கத்தில் பேருந்தின் எரிபொருள் தொட்டியில் கசிவு ஏற்பட்டு, உடனடியாக தீப்பிடித்தது. தீ வேகமாக பரவி, பேருந்து முழுவதும் எரிந்தது.

உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் திடீரென ஏற்பட்ட இந்த அவசரநிலையை உணருவதற்குள் தீ பரவியதால், அனைவரும் வெளியேற முடியவில்லை.

இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பினர்.

பின்னர் சிகிச்சை பெற்றவர்களில் மேலும் சிலர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *