மேற்கு வங்கத்தின் புதிய முதலமைச்சராக பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக சட்டமன்றக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
294 தொகுதிகள் கொண்ட மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்று தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேற்குவங்கத்தில் பாஜக தனித்து ஆட்சியமைப்பது இதுவே முதல் முறை என்பதால் இந்த வெற்றி தேசிய அரசியலிலும் கவனம் பெற்றுள்ளது.
நாளை கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் சுவேந்து அதிகாரியின் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இதில் பாஜக முக்கிய தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான சுவேந்து அதிகாரி, 2020-ல் பாஜகவில் இணைந்தார்.
மம்தா பானர்ஜியை நந்திகிராம் மற்றும் பவானிபூர் தொகுதிகளில் தோற்கடித்ததன் மூலம் மாநில அரசியலில் தனது செல்வாக்கை வலுப்படுத்தியுள்ளார்.
