India

தேர்தல் நாள்: 5 மாநிலங்களில் ஊதியத்துடன் விடுப்பு கட்டாயம் – தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு நாளில் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும். 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிப்படி,

வாக்களிக்கும் உரிமை உள்ள ஒவ்வொருவருக்கும் அந்த நாளில் வேலைக்கு வராமல், சம்பளத்துடன் விடுமுறை பெற உரிமை உள்ளது. இதற்காக சம்பளத்தில் எந்தவிதக் குறைப்பும் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விதியை மீறும் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

மேலும், தங்கள் சொந்த தொகுதியைத் தவிர வேறு இடங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், வாக்களிக்கச் செல்ல இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் பொருந்தும். கூடுதலாக சில மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தல்களுக்கும் இது நடைமுறையில் இருக்கும்.

தேர்தல் நடைபெறும் நாட்களில் மக்கள் சுலபமாக வாக்களிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *