தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி, பாஜகவுடன் ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில் வரும் 23 மற்றும் 29 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, நாடியா மாவட்டத்தில் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டிலிருந்து 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மேற்குவங்கத்திற்கு தேர்தல் பணிக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் பாஜக தனது ஆதரவுக்கான அதிகாரிகளை மேற்குவங்கத்தில் நியமித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், காங்கிரஸ் கட்சியும் பாஜகவுடன் மறைமுகமாக இணைந்து செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.
