தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
காங்கிரஸ் ஆதரவு கிடைத்ததால், தவெக கூட்டணியின் பலம் 112 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து தவெக தலைவர் விஜய் நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஆனால், தேவையான பெரும்பான்மையை நிரூபித்த பிறகே ஆட்சியமைக்க அழைப்பு வழங்க முடியும் என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று மீண்டும் விஜய் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. பின்னர் வெளியிடப்பட்ட விளக்கத்தில், ஆட்சியமைக்க தேவையான முழு எம்எல்ஏ ஆதரவு இன்னும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், தவெக நிர்வாகிகள் இடதுசாரி கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.
ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், “திமுகவுடன் ஆலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். தற்போது தவெகவுக்கு பெரும்பான்மைக்கு இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
