தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு வழங்கும் முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசிக செய்தித் தொடர்பாளர் பாவலன், “விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு சனிக்கிழமை காலை ஆதரவு கடிதம் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தனது சமூக வலைத்தள பதிவில், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு; இது திருமா காலம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது.
காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்திருந்தாலும், பெரும்பான்மைக்கு மேலும் சில உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது. இதையடுத்து, விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.
தொடர்ந்து, திருமாவளவன் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின், விசிகவும் ஆதரவு வழங்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
