புதுச்சேரியில் புதிய அரசு வரும் 13ஆம் தேதி பதவியேற்க உள்ளது. முதலமைச்சர் என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் – என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கிறது.
கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையை என்.டி.ஏ கூட்டணி எளிதாக பெற்றது.
இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 4 இடங்களிலும், அதிமுக மற்றும் எல்.ஜே.கே தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்று கூட்டணியின் மொத்த பலம் 18 ஆக உயர்ந்தது.
இதையடுத்து என்.ரங்கசாமி மற்றும் புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.
பெரும்பான்மை ஆதரவு உறுதியானதை தொடர்ந்து, ஆளுநர் என்.ரங்கசாமியை அரசு அமைக்க அழைத்துள்ளார்.
இதன்படி, வரும் புதன்கிழமை காலை 11.15 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்கிறார்.
மேலும், பாஜகவுக்கு இரண்டு அமைச்சரவை இடங்களும் சபாநாயகர் பதவியும் கிடைக்கும் என ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
