தென்மேற்குப் பருவமழை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. பகல் வேளைகளில் வெயில் வட்டிவதைத்தாலும், இரவு நேரங்களில் இடியும் மின்னலுடன் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி, கரூர், குளித்தலை, கோவை, திருச்சி, ஈரோடு, நீலகிரி போன்ற பல இடங்களில் மழை பதிவாகியுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 11,12,13 ஆம் தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் திருவண்ணாமலை, கடலூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் சேலம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தயுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் இன்றும் நாளையும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதே போல தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளா கடலோர பகுதிகளிலும் வரும் 13ஆம் தேதி வரை மணிக்கு 50 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதனால் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.