மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக தவெக அரசு உறுதியான நிலைப்பாடு எடுக்குமா என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியிருப்பதை கண்டித்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் அரசு, காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் ஆதரவில் இயங்கும் தவெக அரசு, கர்நாடக அரசை நேரடியாக எதிர்த்து பேச முடியாமல் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மேலும், மேகதாது அணைக்காக பூமி பூஜை நடத்தும் அளவுக்கு கர்நாடக அரசுக்கு தைரியம் வந்தது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி நதி டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல், பல மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பதாகவும், தமிழ்நாட்டின் நீர்வழி உரிமையை அதிமுக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
