ஆற்றில் நடக்கும் மரணம் தொடர்பான வீடியோ ஒன்றை இயக்குனர் பாக்கியராஜ் வெளியிட்டுள்ள நிலையில் இது குறித்து கோவை மாவட்ட எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் திருப்பூரை சேர்ந்த உதவியாளர் கோபிநாத்துடன் இமாச்சலபிரதேசத்தில் படப்பிடிப்பு பணிகள் தொடர்பாக சுற்றுலா சென்றார்.
இந்த நிலையில் கின்னார் மாவட்டம் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் தஞ்சின் சம்பவ இடத்திலேய உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால் வெற்றி துரைசாமி மாயமானார்.
இந்த நிலையில் கடந்த எட்டு நாட்களாக தேடுதல் வேட்டைக்குப் பின்னர் வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது நேற்று தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையே இயக்குநர் பாக்கியராஜ் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, அம்பாரம்பாளையம் ஆற்றுக்கரையில் கொலைகள் நடைபெறுவதாக இயக்குநர் பாக்கியராஜ் கூறி இருந்தார்.
அதாவது அம்பாரம்பாளையம் ஆற்றுக்கரையில் நீராடும் நபர்களை சிலர் நீருக்குள் அழுத்தி கொலை செய்வதாகவும், அவர்களின் உடல்களைத் நீருக்குள் தேட உறவினர்களிடம் பணம் கேட்பதாகவும் பாக்கியராஜ் பகீர் தகவலை தெரிவித்திருந்தார்.
அந்த வீடியோவில் இயக்குனர் பாக்கியராஜ் சொல்லும் காட்சிகள் அனைத்தும் வெற்றி துரைசாமி உயிழந்த சம்பவத்தை போன்று உள்ளது.
இதையும் படிங்க : வெற்றி துரைசாமி யார்? தந்தை உருக்கம்!
இதனைப் பார்த்த நெட்டிசன்ஸ் வெற்றி துரைசாமியின் மரணம் மனதை பாதித்ததால் இது போன்று கதையை சொல்லி இருக்கலாம் என இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுவரை பவானி ஆற்று பகுதியில் இந்த மாதிரியான கொலை சம்பவம் எதுவும் நடந்ததாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் எந்தவித வழக்குகளும் பதியப்படவில்லை என கோவை மாவட்ட எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார்.
அதில், மேட்டுப்பாளையம் லைஃப் கார்டுஸ் வீரர்கள் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த 914 பொதுமக்களை மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டில், பவானி ஆற்றில் தற்செயலாக மூழ்கி மொத்தம் 20 நபர்கள் இறந்ததாகவும், 2023-ல் தற்செயலாக மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்படும் மரண சம்பவங்கள் குறித்து பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை மற்றும் உண்மையற்றவை என மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.