தமிழகத்தில் நாளை மறுதினம் (19.04.2024) வாக்குப்பதிவு துவங்க உள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்கான மக்கள் கருத்துக் கணிப்பு எப்பொழுதுமே முக்கியத்துவம் பெறும். எனவே, தென் மாவட்டங்களில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகள், 42 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு தலா 3000 வாக்காளர்கள் வீதம் மொத்தம் 21000 நபர்களை நேரடியாக தொகுதி வாரியாக சந்தித்து நமது ஐ தமிழ் நியூஸ் குழுவினர் நடத்திய மெகா கருத்துக்கணிப்பின் முடிவுகள் இதோ உங்கள் பார்வைக்கு…
தென்காசி (தனி ) மக்களவை தொகுதி
இரண்டு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதி என்ற அந்தஸ்தைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது தென்காசி மக்களவை தொகுதி.
தென்காசி, கடையநல்லூர், ராஜபாளையம் ஆகிய 3 பொதுத்தொகுதிகள் மற்றும் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் என 3 தனித்தொகுதிகளையும் உள்ளடக்கிய தென்காசி மக்களவை தொகுதிதான் தென் மாவட்டத்திலுள்ள ஒரே ஒரு தனி தொகுதியாகும்.
9 தடவை வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்த இங்கு அதிமுக 3 தடவைகள் வெற்றி பெற்றுள்ளன. சிபிஐ 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. இங்கு திமுக ஒரே ஒரு முறை, அதுவும் கடந்த மக்களவை தேர்தலின் போது மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. அப்போது, தனுஷ் எம் குமாரை எம்.பி. ஆக்கியதன் மூலமாக தனது முதல் வெற்றியை பதிவு செய்தது திமுக. இம்முறை, தனுஷ் எம் குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்படவே சங்கரன்கோயிலைச் சேர்ந்த மயக்கவியல் நிபுனரான டாக்டர் ராணி ஸ்ரீ குமார் திமுக சார்பாக தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவருக்கு எதிராக அதிமுக சார்பில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இதே தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வெற்றியை நழுவ விட்ட இவர், மனம் தளராமல் மீண்டும் இங்கு போட்டியிடுகிறார். அதே போல, பாஜக கூட்டணி வேட்பாளராக இங்கு களம் காண்கிறார் தமிழக மக்கள் முன்னேற்ற கழகதலைவர் ஜான்பாண்டியன். இவர்களோடு நாம் தமிழர் கட்சியின் சார்பாக இசை மதிவாணன் போட்டியிடுகிறார். அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான இவர் கடந்த மக்களவை தேர்தலின் போதும் இதே தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாதி ரீதியிலான வாக்கு வங்கி எப்படி உள்ளது? என்பதை பார்ப்போம்
பட்டியல் சமூகத்தினர் மிக அதிக அளவாக சுமார் 31 சதவீதமும், நடார் சமூகம் 18 சதவீதம், தேவர் சமூகம் 17 சதவீதம், கிறிஸ்தவர்கள் மற்றும் பிறசமூகத்தை சார்ந்தவர்கள் 11 சதவீதமும், இஸ்லாமியர்கள் 9 சதவீதமும் இவர்களுக்கு அடுத்தபடியாக யாதவர் சமூக மக்களும், அவர்களுக்கும் அடுத்தபடியாக நாயுடு சமூகத்தினர் ஆகியோர் இங்கு வாழ்கிறார்கள்.
இங்கு யார் யாருக்கு இடையே கடுமையான போட்டி? என பார்க்கும் போது,
சுயேச்சைகள் உட்பட மொத்தம் 15 பேர் களத்தில் இருந்தாலும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலத்தை நம்பி திமுக வேட்பாளர் களம் காண்கிறார். அவருக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்துள்ளார்.
அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் தனது கட்சியின் பலத்தை நம்பி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிகளம் காண்கிறார். அதே போல, பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் தனது கட்சியின் பலத்தையும் நம்பி தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் களம் காண்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணனும் வாக்குகளை வசப்படுத்த தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போதைய திமுக எம்.பி. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி, மற்ற கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன.
இதில், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி என இருவருமே களம் இறங்கியுள்ளதால் கடந்த முறையைப் போல இல்லாமல் இந்த முறை திமுக மிகக்கடுமையான சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதே தற்போதைய சூழலாக உள்ளது.
இதுவரை ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை, ஆகிய மக்களவை தொகுதிகளில் நமது ‘ஐ தமிழ் நியூஸ்’ நடத்திய மெகா சர்வேயின் மூலம் தற்போதைய நிலவரப்படி பொதுமக்களின் ஆதரவு எந்த கட்சிக்கு இருக்கிறது? முன்னிலையில் இருப்பது யார்? அடுத்தடுத்த நிலைகளில் இருப்பது எந்த கட்சி? என்பது போன்ற விபரங்களை பார்த்தோம்.
அதேபோல் தென்காசி மக்களவை தொகுதியின் சிட்டிங் எம்.பி.யாக இருக்கும் தனுஷ் எம் குமாரின் செயல்பாடுகள் எப்படி? தொகுதி மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறாரா?
அவர் ஆற்றிய பணிகளுக்கு மக்கள் அளித்துள்ள மதிப்பெண்களையும், அவை திமுக சார்பாக தற்போது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள டாக்டர் ராணி ஸ்ரீகுமாரின் வெற்றி வாய்ப்பில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும், கொடுத்த வாக்குறுதிகளை எம்.பி.நிறைவேற்றி இருக்கிறாரா? திமுக ஆட்சிய்ன் செயல்பாடு, மத்திய மோடி அரசின் செயல்பாடு போன்றவை எப்படி இருக்கின்றன? உங்கள் ஓட்டு யாருக்கு? தமிழ்நாட்டில் எந்தக் கூட்டணி ஜெயிக்கும்? மத்தியில் எந்தக் கூட்டணி ஜெயிக்கும் போன்ற கேள்விகளுக்கு வாக்காளர்களின் பதிவு எப்படி உள்ளது போன்றவற்றையும், நிறைவாக, இந்த தென்காசி மக்களவை தொகுதியில் தற்போதய நிலவரப்படி முன்னணியில் இருப்பது எந்த கட்சி? அடுத்தடுத்த நிலைகளில் உள்ள கட்சிகள் எவையெவை போன்ற விபரங்களயும் இப்போது பார்க்கலாம்.
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி
தென்னை, மாம்பழ விவசாயத்துக்கும், நூற்பாலைகளுக்கும் பெயர் பெற்ற இந்த தொகுதி தொடர்ந்து 2வது முறையாக திமுகவைச் சேர்ந்த ச.தங்க பாண்டியன் எம்.எல்.ஏ.வசம் இருக்கிறது. இங்கு மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில்,
எம்.பி.தனுஷ்குமாரின் செயல்பாட்டை பொறுத்தவரை, 11 சதவிகித வாக்காளர்கள் சிறப்பு எனவும், 60 சதவீத வாக்காளர்கள் சுமார் எனவும், சிறப்பாக செயல்படுவதாக 29 சதவீத வாக்காளர்களும் தெரிவித்துள்ளனர்.
இங்கு, அதிமுகவுக்கு 37 சதவீத வாக்குகளும், திமுகவுக்கு 34 மற்றும் பாஜகவுக்கு 27 சதவீத வாக்குகளும் நமது கருத்துக் கணிப்பின் போது பதிவாகி உள்ளன.
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி
ஆன்மீக தலங்களையும், வனம் – அருவி – ஆறு ஆகியவற்றை கொண்ட சுற்றுலா தளங்களையும் தன்னகத்தே கொண்ட வாசுதேவநல்லூர் தொகுதியின் மதிமுக எம்.எல்.ஏ. வாக திருமலைகுமார் உள்ளார்.
தனுஷ்குமார் எம்.பி யின் செயல்பாட்டை பொறுத்தவரை 28 சதவீத வாக்காளர்கள் சிறப்பு என்றும் 56 சதவிகித வாக்காளர்கள் சுமார் என்றும், 45 சதவீதத்தினர் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இங்கு திமுகவுக்கு 40, அதிமுகவுக்கு 28 சதவீத வாக்காளர்களும், பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றிற்கு தலா 19 மற்றும் 13 சதவீத வாக்குகளும் நமது கருத்துக் கணிப்பின் போது பதிவாகி உள்ளன.
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி
நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்ற சங்கரன்கோவில் தொகுதி தற்போது திமுக எம்.எல்.ஏ. ஈ.ராஜா வசம் உள்ளது. தற்போது எம்.பி.யாக உள்ள தனுஷ் எம் குமாரின் செயல்பாடு குறித்து இங்கு வாக்காளர்களின் பதிவுகளை பார்க்கும் போது, 15 சதவீத வாக்காளர்கள் சிறப்பு எனவும், 26 சதவீத வாக்காளர்கள் சுமார் எனவும், 62 சதவீத வாக்காளர்கள் மோசம் என்பதாகவும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
இங்கு, திமுகவுக்கு 44 சதவீதமும், அதிமுகவுக்கு 35 சதவீத வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சிக்கு 21 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி
ஆண்டாள் கோயிலாலும், பால்கோவாவாலும் பெயர் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தற்போது அதிமுகவை சேர்ந்த மான்ராஜ் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். எம்.பியின் செயல்பாட்டை பொறுத்தவரை 40 சதவீத வாக்காளர்கள் சிறப்பாக இருப்பதாகவும், 49 சதவீத வாக்காளர்கள் சுமார் எனவும், 11 சதவீத வாக்காளர்கள் மோசம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில், அதிமுகவுக்கு 51 சதவீதம், திமுகவுக்கு 35 சதவீதம் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு 14 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தற்போது அதிமுகவின் செ.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். தொகுதி எம்.பி தனுஷ் குமாரின் கடந்தகால செயல்பாட்டை பொறுத்தவரை, வாக்காளர்களில் 33 சதவீதம் பேர் சிறப்பாக இருப்பதாகவும், சுமார் என்று 21 சதவீத வாக்காளர்களும், 27 சதவிகித வாக்காளர்கள் மோசம் என்றும் தெரிவித்துள்ளனர்.
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக 48 சதவீதம், திமுக 43 சதவீதம் மற்றும் பாஜக 9 சதவீதம் என தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர் வாக்காளர்கள்.
தென்காசி சட்டமன்ற தொகுதி
குற்றாலம் அருவி சுற்றுலா தலமும், வணிக நிறுவனங்களும் நிறைந்த தென்காசி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ,வாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பழனிநாடார். தொகுதி எம்.பியின் செயல்பாட்டை பொறுத்தவரை, 29 பேர் சிறப்பு என்றும், 36 சதவிகித வாக்காளர்கள் சுமார் எனவும், 35 சதவீத வாக்காளர்கள் மோசம் என்றும் நமது கருத்துக் கணிப்பின் போது தங்கள் கருத்துக்களை பதிய வைத்துள்ளனர்.
இங்கு, திமுகவுக்கு 34 சதவீதம் அதிமுகவுக்கு 19 சதவீதம், பாஜகவுக்கு 19 சதவீதம், நாம் தமிழர் கட்சிக்கு 12 சதவீதமும் மற்றவை என 14 சதவீத வாக்காளர்களும் தங்கள் கருத்துக்களை நமது கருத்துக்கணிப்பு படிவத்தில் பதிவு செய்துள்ளனர்.