சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளியின் விலை 40 ரூபாய் குறைந்து ரூ.140 விற்பனையாகி வருகிறது.
நாடு முழுவதும் பெய்து வரும் தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையை பொறுத்தவரையில் தக்காளியின் விலை நேற்று 180 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஆனால் சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. அதே போல் மதுரையில் தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.
இவ்வாறு தமிழ் நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் ரேஷன் கடைகளில் தக்காளி ரூபாய் 60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் தக்காளி விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஆலோசைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், 500 கடைகளில் தக்காளி விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே தமிழகத்தில் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நடந்துவரும் நிலையில், இன்று முதல் மேலும் 200 கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று கூடுதலாக 200 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளியின் விலை 40 ரூபாய் குறைந்து ரூ.140 விற்பனையாகி வருகிறது. வரத்து குறைவால் நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்து வரும் நிலையில் இன்று தக்காளி விலை குறைந்துள்ளது சாமானியர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படடுத்தியுள்ளது.