துபாயில் இருந்து நேற்று இரவு திருச்சி வந்த விமானத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 60 லட்சம் மதிப்புடைய தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணிகளின் குழந்தைகள் மற்றும் ஆவணங்களை வழக்கம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனியா அழைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர் .
சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் அந்த ஆண் பயணி மலக்குடலில் மறைத்து வைத்து 995.500 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 60 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
அதேபோல், நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஆண் பயணி ஒருவர், தனது பேண்ட் பெல்ட் போடும் பகுதியில் நூதன முறையில் மறைத்து வைத்து கடத்தி வந்த 700கிராம் எடையுள்ள 7 தங்க பிஸ்கட் மற்றும் 94கிராம் எடையுள்ள தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்று ஒரே இரவில் திருச்சி வந்த இரண்டு விமானத்தில் சுமார் 1 கோடிகும் அதிக மதிப்புடைய தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.