தருமபுரி மாவட்டம், தொப்பூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பிக்கும் பணியை நாளை மறுநாள் (24-ம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலின்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.7,000 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதையடுத்து, இது குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயத்தில் யாரெல்லாம் இந்த உரிமைத் தொகைக்கு விண்ணபிக்கலாம் என்ற நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் யூலை 24 முதல் ஆகஸ்ட் 04 வரையும் இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 05 முதல் ஆகஸ்ட் 16 வரையும் நடைபெறும் என்றும் நியாயவிலைக் கடைப் பணியாளர் ஒவ்வொரு நியாய விலைக் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவார்கள் என்றும் அறிவிப்பட்டது.
இந்நிலையில் 24-ந் தேதி தருமபுரி மாவட்டம், தொப்பூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கும் பணியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்காக வரும் திங்கட்கிழமை காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் மாவட்டம், ஓமலூர் விமான நிலையத்திற்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக தொப்பூர் முதற்கட்டமாக நடைபெறும் விண்ணப்ப பதிவை தொடங்கி வைத்து கணினியில் பதிவு செய்வதையும் பார்வையிடவுள்ளார்.
இதையடுத்து, மகளிர் குழுவினருடன் சிறிது நேரம் கலந்துரையாடல் நடத்திய பின்னர், அருகில் உள்ள மைதானத்தில் அமைக்கப்படும் மேடையில் முதல்வர் உரை நிகழ்த்த உள்ளார்.