தமிழ்நாடு-கர்நாடக மாநில எல்லையில் இயங்கிவந்த பட்டாசுக் கடையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் பரிதாபமாக உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
தமிழ்நாடு-கர்நாடக எல்லையில், கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி என்ற இடத்தில் இயங்கிவந்த பட்டாசுக் கடையில் நேற்று (7-10-2023) ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர் என்ற மிகுந்த வேதனையான செய்தியினைக் கேட்டு துயரமடைந்தேன்.
இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் மற்றும் காவல் துறை அலுவலர்களை விபத்து நடந்த இடத்திற்கு சென்று தேவைப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உறுதுணையாக இருக்க அனுப்பிவைத்துள்ளேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொள்ளவும், மேல்சிகிச்சை தேவைப்படுபவர்களை தமிழ்நாட்டுக் கொண்டுவரவும் உரிய ஏற்பாடுகளை செய்ய உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி அவர்களையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களையும் அனுப்பிவைத்துள்ளேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.