திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 2 கோடி மதிப்புள்ள தங்க லுங்கிகள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து திருவனந்தபுரம் வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் விமானநிலையத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது .ஒவ்வரு பயணிகளையும் முழுமையாக சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இறுதியில் அதிர்ச்சி காத்திருந்தது.
விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்ட போது திருவனந்தபுரம் கமலேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த முகமது அப்சர் (28) என்ற பயணி 1959 கிராம் தங்கத்தை பிளாஸ்கில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கோழிக்கோட்டை சேர்ந்த சுகைப் (34) என்பவர் லுங்கியில் தங்கக் கலவையை முக்கி கடத்திக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவரிடமிருந்து 10 தங்க லுங்கிகள் கைப்பற்றப்பட்டன. தங்கக் கலவையில் லுங்கியை முக்கி பின்னர் அதை காயவைத்து நூதன முறையில் கடத்திக் கொண்டு வந்துள்ள சம்பவம் கேரளாவில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நூதன முறையில் கடத்தி வரப்பட்ட இருவரிடமிருந்தும் சுமார் 2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இருவரையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் முதற் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.