திருத்தணியில், தனது மகனை ஒரே நேரத்தில் கடித்த இரெண்டு பாம்புகளை அடித்துக் கொன்ற தந்தை, அந்த பாம்புகளையும் கையோடு எடுத்துக் கொண்டு மகனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்(Thiruvallur) மாவட்டம் திருத்தணி அடுத்த கொல்ல குப்பம் கிராமத்தில் வசிக்கும் மணி எல்லம்மாள். இவர்களது 7 வயது மகன் மணி. இவர்கள் அதே பகுதியில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு வழக்கம்போல் அவர்களுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, நள்ளிரவில் கண்ணாடி விரியன் மற்றும் கட்டுவிரியன் பாம்புகள் அவருடைய மகன் மணியை கடித்துவிட்டு மகன் மேலேயே படுத்து இருந்தது.
அப்போது, சிறுவன் வலியால் கதறி துடித்து கத்தி அலறினான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை கண்ட மணியின் தந்தை, அந்த இரண்டு பாம்புகளையும் அடித்துக் கொன்று,அவற்றை தன் கையோடு எடுத்துக் கொண்டு, மகனையும் அழைத்துக் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
மருத்துவமனையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தினர்.
கையில் 2 பாம்புகளையும் எடுத்துக் கொண்டு, தன் மகனுடன் மேல் சிகிச்சைக்கு வந்த நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது என்றும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இதற்கான தீர்வினை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.