நாடு முழுவதும் கிளைகளை கொண்ட ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் 5 மாநிலங்களில் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பரிசோதனை கூடங்களும் ஸ்கேன் மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இங்கு வரி ஏய்ப்பு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் உள்ள 13 மையங்கள் உள்பட தமிழகத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை நடத்தினர்.
அதன்படி சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இந்த மையங்களின் மருத்துவர்கள், நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அதே போல் திருநெல்வேலியில் உள்ள இரண்டு ஸ்கேன் சென்டரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த இரண்டு வாகனங்களில் 6 அதிகாரிகள் வந்தனர்.
அத்துடன் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனங்களின் உரிமையாளர் கோவிந்தராஜன் வீட்டில் அவரது மனைவி மருத்துவர் கோமதியிடமும் விசாரணை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனைகளில் 15 அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஸ்கேன், மருத்துவ பரிசோதனை செய்ய வரும் நோயாளிகளுக்கு இடையூறு ஏதுமின்றி இந்த வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.