குஜராத்தில், நடைபெற்ற காற்றாடி திருவிழாவில் (uttarayan festival) காற்றாடி நூல் கழுத்தை அறுத்து 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிரந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பமாவதில் 130 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் மகர சங்கராந்தியையொட்டி உத்தராயண பண்டிகை (uttarayan festival) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது மக்கள் வண்ண வண்ண காற்றாடிகளை பறக்கவிட்டு குதூகலிப்பது பிரசித்தமான வழக்கம்.
மேலும், இந்த கொண்டாத்தின் போது, அவ்வப்போது சிலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுவது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
தொடர்ந்து, இந்த கொண்டாட்டத்தின் போது பறக்கவிடப்படும் காற்றாடிகளின் மாஞ்சா நூல், சிலரின் கழுத்தை அறுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் ஏற்படுகிறது.
அதுபோன்று, அந்த மாநிலத்தின் பவநகரில் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கீர்த்தி என்ற 2 வயது சிறுமியின் கழுத்தை காற்றாடி நூல் அறுத்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல, விஸ்நகரில் தனது தாயுடன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த கிஸ்மத் என்ற 3 வயது பெண்குழந்தையின் கழுத்தை காற்றாடி நூல் அறுத்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அக்குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், ராஜ்கோட் நகரில் ரிஷப் வர்மா என்ற 7 வயது சிறுவன், காற்றாடி வாங்கிக்கொண்டு பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். அப்போது, மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் பரிதாபமாக பலியானான்.
இதேபோல வதோதரா, கட்ச், காந்திநகர் மாவட்டங்களில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் காற்றாடி நூலால் கழுத்து அறுபட்டு உயிரிழந்தனர். காற்றாடி நூலால் மேலும் 130 பேர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.