ஓசூர் அருகே செயற்பட்டு வரும் தனியார் பட்டாசு குடோனில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்ட போது பட்டாசு குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் அதிகாரிகள் காயமடைந்தனர்.
கடந்த மாதம் கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகள், குடோன்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி நிலவரித் திட்ட சிறப்பு டி.ஆர்.ஓ. பாலாஜி தலைமையில் ஓசூர் அருகே உள்ள ஜே.காரப்பள்ளி பகுதியில் செயற்பட்டு வரும் தனியார் பட்டாசு குடோனில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பட்டாசு குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிறப்பு டி.ஆர்.ஓ. பாலாஜி, நிலவரித் திட்ட சிறப்பு தாசில்தார் முத்துப்பாண்டி, பட்டாசு குடோனின் மேலாளர் ஆகியோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
சிறப்பு டி.ஆர்.ஓ. பாலாஜி மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ விசாரணை நடத்தினர்.