மழை காரணமாக சென்னையில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை 31 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
தமிழகத்தல் கத்தரி வெய்யில் முடிவடைந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக குமரி, தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் குமரி, தேனி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது.
இதன் காரணமாக நுங்கம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் என பலரும் சிரமத்துக்குள்ளாகினர்.
இந்த நிலையில் மழை காரணமாக நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை 31 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. ஜெர்மனி, தோகா, மும்பை, துபாய் உள்ளிட்ட விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல் ஐதராபாத், பெங்களூரு திரும்பின. மேலும் மலேசியா, தாய்லாந்து, டெல்லி , ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 12 விமானங்கள் நடுவானில் வட்டமிட்டன.
நள்ளிரவு 12 மணிக்கு மேல் மழை ஓரளவு குறைந்ததையடுத்து விமானங்கள் ஒவ்வொன்றாக தரையிறங்கின. இதனால் 8 சர்வதேச விமானங்கள் உள்பட 15 விமானங்கள் சென்னையில் இருந்து தாமதமாக புறப்பட்டுச் சென்றன.