கோவாவில் நடைபெற்று வரும் 37-வது தேசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான வாள் வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் .
கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நேற்று 37-வது தேசிய விளையாட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது . நவம்பர் 9ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்த 37வது தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டுள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களின் அணி வகுப்பு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தேசிய விளையாட்டு போட்டியின் முதல் நாளான நேற்று வாள்வீச்சு போட்டிகள் நடைபெற்றது. இதில் மகளிருக்கான சேபர் தனிநபர் போட்டியில் தமிழகத்தின் பவானி தேவி இறுதிப் போட்டியில் 15-5 என்ற கணக்கில் கேரளாவின் சவுமியாவை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டியிலும் தமிழக வீராங்கனை பவானிதேவி, தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது .