சங்கரன்கோவில் அருகே 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது .
சங்கரன்கோவில் அருகேயுள்ள உடப்பன்குளம் கிராமத்தில் இறந்தவர் உடலை குறிப்பிட்ட தெரு வழியாக எடுத்துச் செல்வது தொடர்பாக இரு பிரிவினரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது .
இந்நிலையில் கடந்த 2014 மே 31-ம் தேதி இரவில் உடப்பன்குளத்தை சேர்ந்த காளிராஜ், முருகன், வேணுகோபால் ஆகியோர், அடையாளம் தெரியாத சிலரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக திருவேங்கடம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி, பரமசிவன், குருசாமி, கண்ணன், முத்துசாமி, காளிராஜ், வி.கண்ணன், முருகன் , முத்துகிருஷ்ணன், கண்ணன், சுரேஷ் உள்ளிட்ட 25 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னுமணி உள்ளிட்ட 11 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி சுரேஷ்குமார் கடந்த 24-ம் தேதி தீர்ப்பு வழங்கினார் . குற்றம் நிருபிக்கப்படாததால் மற்ற 11 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து குற்றவாளிகள் 11 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்கள் செப். 26-ம் தேதி (நேற்று) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பொன்னுமணி, காளிராஜ், குருசாமி, முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், குட்டிராஜ், கண்ணன், உலக்கன், கண்ணன், முருகன் ஆகியோருக்கு 5 ஆயுள் தண்டனையும், வே.கண்ணன், சுரேஷ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார்.