துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக (7.4 magnitude) பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது. துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது.
நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்து தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் கட்டிடங்கள் தரைமட்டமானதால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோயின. நிலநடுக்கத்தால் வானுயர குடியிருப்பு கட்டிடங்கள், அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு சரிவது போல நொடிப்பொழுதில் இடிந்து தரைமட்டமாகின.
இதனால், அங்கு திரும்பிய திசையெல்லாம் கட்டிடக் குவியலாக காட்சி அளித்தது. மலைபோல் குவிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளில் மக்கள் சிக்கிய நிலையில் அவர்களை மீட்க ஆயிரக்கணக்கான மீட்பு குழுவினர் களமிறக்கப்பட்டு, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. பொதுமக்களும் அவர்களுடன் இணைந்து வெறும் கைகளிலேயே இடிபாடுகளை அகற்றி அதனுள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், துருக்கி, சிரியா எல்லைப் பகுதியில் நேற்று மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் (6.4 magnitude) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில், 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முன்னதாக, ஏற்கனவே கடந்த பிப்ரவரி 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 46,000-ஐ கடந்ததுள்ளது.
இதனையடுத்தது, அதன் மீட்பு பணிகள் ஓரளவுக்கு முடிந்த நிலையில், மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.