ஐஐடி நிறுவனங்களில் 2023 – 24 கல்வியாண்டில் பயின்ற 8,000 மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த கல்வியாண்டில், ஐஐடியில் பயின்ற மொத்தம் 21,500 மாணவர்கள் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், 13,410 மாணவர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.
இந்திய தொழில்நுட்பக் கழகங்களில்(ஐஐடி) பயிலும் மாணவர்களுக்கு பெரும் பன்னாட்டு நிறுவனங்களில் அதிக ஊதியத்துக்கு வேலை கிடைக்கும் என்ற பெருமை இருந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டில் கல்வியை முடித்தவர்களில் பலருக்கு வேலை கிடைக்காத சூழல் நிலவுகிறது.
ஐஐடி கான்பூரின் முன்னாள் மாணவரும் வேலைவாய்ப்பு வழிகாட்டியுமான தீரஜ் சிங் லிங்க்டின் தளத்தில் இதுகுறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 23 அறிக்கைகளை பகுப்பாய்வு செய்ததில், கடந்த 2024ஆம் ஆண்டு ஐஐடியில் பயின்றவர்களில் 21,500 பேர் வளாக வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ளனர்.
அதில், 13,410 பேருக்கு வேலை கிடைத்த நிலையில், 8,090 பேர் வேலை கிடைக்காமல் உள்ளனர். கடந்தாண்டை காட்டிலும், வேலை கிடைக்காத மாணவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.