நாமக்கல் மாவட்டத்தில் உணவகம் ஒன்றில் பர்கர் வாங்கி சாப்பிட்ட 9 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் உணவகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சவர்மா வாங்கி சாப்பிட்ட பள்ளி மாணவி உயிழந்தார். அதே உணவகத்தில் பள்ளி மாணவி ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு சக நண்பர்களுக்கு சவர்மா வாங்கி கொடுத்ததில், வந்தி மயக்கம் ஏற்பட்டு 11 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்தவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றனர்.
இதனை அடுத்து, குறிப்பிட்ட தனியார் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், ஹோட்டல் உரிமையாளர் நவீன்குமார், மற்றும் சமையல் செய்தவர்கள் இருவர் என 3 பேர் கைது செய்யப்பட்டதோடு மாவட்டம் முழுவதும் ‘சவர்மா’, கிரில் சிக்கன் விற்பனை செய்ய தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தவிர நாமக்கல் முழுவதும் உணவுப் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், ஃபாஸ்ட் புட் உணவகங்கள், உள்ளிட்ட உணவங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில், நாமக்கல்லில் வேறு ஒரு உணவகத்தில் பர்கர் சாப்பிட்ட 9 பேர் வாந்தி எடுத்த நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் மிஸ்டர் பர்கர் என்ற கடை அமைந்துள்ளது. இங்கு பர்கர் சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அதே கடையில் சாப்பிட்ட 8 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.
இதில் 8 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் 18 வயது இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.