இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கின கடந்த 2009 ஆவது வருஷத்துக்கு அப்புறம் 2023 ல மறுபடியும் இந்தியாவின் ஆஸ்கார் கனவு நனவாகிருக்கு. இந்த முறை கூடுதல் சிறப்புகளோடு. RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் & The Elephant Whisperers என்ற ஆவண குறும்படம் இந்த வருடம் ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியர்களை பெருமையடைய வைத்துள்ளன.
சரி.. இந்தியாவை சேர்ந்த படைப்புகள் எப்படி விருது வாங்கின என்பது குறித்தும் அதற்கு முன்னதாக ஆஸ்கர் விருதுகள் குறித்தும், என்னென்ன பிரிவுகள்ல யார் யார் விருதுகள் வென்றுள்ளனர் எனவும் விரிவாக பார்க்கலாம்.
ஆஸ்கர் விருதுகள்
உலகில் உள்ள அனைத்து திரைப்பட கலைஞர்களுக்கும் மிகப்பெரிய கவுரவமாகவும், கனவாகவும் இருக்கும் ஆஸ்கார் விருது கடந்த 1929 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆஸ்கார் விருதுக்கு எப்படி பரிந்துரைப்பது என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. அது எப்படியெனில், பொதுவாக ஆஸ்கர் விருதுகளை வழங்கும் Academy of Motion Picture Arts & Science அமைப்பு சுமார் 7000 உறுப்பினர்களை கொண்டது. தயாரிப்பாளர்கள், படைப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் மொத்தமாக 17 பிரிவுகளாக இந்த அமைப்பில் செயல்படுவார்கள். விருதுகள் மொத்தம் 24 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் விருதாளர்களை அமைப்பிலுள்ள உறுப்பினர்கள் தான் தேர்வு செய்வார்கள். அதில் ஒவ்வொரு பிரிவில் சிறந்த படங்களை அந்தந்த பிரிவை சேர்ந்த உறுப்பினர்களே தேர்வு செய்வர். சிறந்த திரைப்படத்தை மட்டும் அமைப்பிலுள்ள சுமார் 7000 உறுப்பினர்களும் சேர்ந்து தேர்வு செய்வர்.
பரிந்துரைப்பது எப்படி?
முன்னதாக பரிந்துரை பண்ணுவதை பொறுத்தவரையில் ஒவ்வொரு உறுப்பினரும் தனக்கான பிரிவில் 5 திரைப்படங்கள் அல்லது கலைஞர்களை வரிசைப்படுத்தி பரிந்துரை செய்ய முடியும். அப்படி பரிந்துரை செய்யப்படுபவர்கள் தங்களுடைய படங்களுக்கு வாக்களிக்க கோரி பிரச்சாரம் செய்வர். படத்தை பார்க்க சொல்வது, சிறப்பு திரையிடலுக்கு அழைப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவர். ஆனால், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து ஆஸ்கர் விருதுக்கான வாக்கெடுப்பை நடத்தும் பிரைஸ்வாட்டர்ஸ்கூப்பர்ஸ் நிறுவனத்தின் வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெறுபவர்கள் விருதுகளை வெல்வர். இதுதான் ஆஸ்கர் விருது நடைமுறை.
இது தவிர படங்கள் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட சில நிபந்தனைகள் இருக்கிறது. அதன்படி,
1. பரிந்துரைக்கப்போகும் படம் குறைந்தது 40 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்க வேண்டும்.
2. ஆஸ்கர் விருது வழங்கப்படுவதற்க்கு முந்தைய ஆண்டில் வெளியாகி இருக்க வேண்டும்.
3. லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு திரையரங்கில் கட்டணம் செலுத்தி பார்க்கும் வகையில் குறைந்தது 7 நாட்கள் ஓடியிருக்க வேண்டும். வெளிநாட்டு மொழி திரைப்படம் என்ற பிரிவிற்கு மட்டும் இதில் விதி விலக்கு உள்ளது. அதுவே, ஆவணப்படம் என்றால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டுமல்லாமல் நியூயார்க் நகரிலும் கூடுதலாக ஓடியிருக்க வேண்டும்.
4.வெளிநாட்டு மொழி திரைப்படங்கள் பிரிவில் ஒவ்வொரு நாடும் ஒரு திரைப்படத்தை மட்டும் பரிந்துரைக்க வேண்டும்.
ஆஸ்கர் விருது பெறும் படங்களும் கலைஞர்களும்
இம்முறையில் இந்த ஆண்டு நடைபெற்ற 95 ஆவது ஆஸ்கர் நிகழ்வில் எந்தெந்த பிரிவுகளில் யார் யார் விருதுகளை வென்றுள்ளனர் என பார்க்கலாம்.
- சிறந்த திரைப்படத்துக்கான பிரிவில் Everything Everywhere All at Once படம் விருது வென்றுள்ளது. 9 போட்டியாளர்களை வீழ்த்தி இப்படம் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிறந்த இயக்கத்திற்கான பிரிவில் Everything Everywhere All at Once படத்தின் இயக்குநர்கள் Daniel Kwan & Daniel Scheinert ஆகியோர் விருதுகளை வென்றுள்ளனர். இவர்கள் தவிர மேலும் 4 போட்டியாளர்கள் இப்பிரிவில் இருந்துள்ளனர்.
- சிறந்த நடிகருக்கான விருதை The Whale படத்தில் நடித்த Brendan Fraser வென்றுள்ளார்.
- சிறந்த நடிகைக்கான விருதை Everything Everywhere All at Once படத்தில் நடித்த Michelle Yeoh க்கு வழங்கப்பட்டுள்ளது.
- Guillermo del toro’s pinocchio திரைப்படத்துக்கு சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அந்த படத்தின் இயக்குநர் Guillermo del Toro, Mark Gustafson ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டனர்.
- இதையடுத்து சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை பொறுத்தவரை, சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை All Quiet on the Western Front படத்தின் ஒளிப்பதிவாளர் James Friend வென்றுள்ளார்.
- சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை Black Panther: Wakanda Forever படத்திற்காக Ruth Carter வென்றுள்ளார்.
- சிறந்த ஆவண திரைப்படத்திற்கான விருதை Navalny ஆவண படத்திற்கு கிடைத்துள்ளது. இவ்விருதுக்கான போட்டியாளர்கள் பட்டியலில், இந்தியாவின் காலநிலை மாற்றத்தை பற்றிய ஆவணப்படமான All That Breaths என்ற ஆவணப்படமும் இடம் பெற்றிருந்த நிலையில், விருதை தவற விட்டுள்ளது All That Breaths. ஒருவேளை அந்த ஆவணப்படமும் விருது வென்றிருந்தால் அது இந்தியாவிற்கு மேலும் பெருமிதமாக அமைந்திருக்கும்.
- சிறந்த படத்தொகுப்புக்கான விருதை Paul Rogers என்பவர் Everything Everywhere All at Once படத்தின் படத்தொகுப்புக்காக வென்றுள்ளார்.
- சிறந்த சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் Germeny -ஐ சேர்ந்த All Quiet on the Western Front என்ற படம் ஆஸ்கர் வென்றுள்ளது.
- சிறந்த ஒப்பனைக்கான விருது The Whale திரைப்படத்துக்காக Adrien Morot, Judy Chin and Annemarie Bradley -க்கு வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருது All Quiet on the Western Front படத்தின் இடையமைப்பாளர் Volker Bertelmann -க்கு வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த தயாரிப்புக்கான விருது All Quiet on the Western Front படத்தின் தயாரிப்புக்காக Production Design: Christian M. Goldbeck; Set Decoration: Ernestine Hipper -க்கு வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருது The Boy, the Mole, the Fox and the Horse படத்திற்காக Charlie Mackesy & Matthew Freud க்கு வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த லைவ் ஆக்ஷன் திரைப்படமாக An Irish Goodbye படம் தேர்வு செய்யப்பட்டு Tom Berkeley & Ross White ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த ஒலிக்கான ஆஸ்கார் விருது Top Gun: Maverick படத்தின் ஒலிக்கலவை கலைஞர்களான Mark Weingarten, James H. Mather, Al Nelson, Chris Burdon and Mark Taylor கிடைத்துள்ளது.
- சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான விருது Avatar: The Way of Water படத்திற்கு கிடைத்துள்ளது.
- சிறந்த திரைக்கதைக்கான Adapted Screenplay பிரிவில், Women Talking ன்ற படத்திற்கும், Original Screenplay பிரிவில் Everything Everywhere All at Once ன்ற படத்திற்கும் ஆஸ்கர் வழங்கப்பட்டுள்ளது.
இறுதியாக இந்த பட்டியலில் விருது வென்ற இந்திய படைப்புகளை பத்தி பார்க்கக்கும்போது,
- இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத படைப்புகளில் ஒன்றாக உள்ள ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
Tell It like a Woman படத்தின் Applause பாடல், Top Gun: Maverick படத்தின் Hold My Hand பாடல், Black Panther: Wakanda Forever படத்திலிருந்து Lift Me Up என்ற பாடல், இம்முறை அதிக ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள Everything Everywhere All at Once படத்திலிருந்து This Is A Life என்ற பாடல் எல்லாம் சக போட்டியாளர்களாக இருக்க அவை அனைத்தையும் தோற்கடித்து விருதை வென்றுள்ளது RRR படத்தின் Naatu Naatu பாடல்.
உலக அளவில் புகழ் வாய்ந்த கலைஞர்களோடு போட்டியிட்டு வென்று தானும் உலக அளவில் புகழ் வாந்தவராக மாறியுள்ள இசையமைப்பாளர் M.M.கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதையடுத்து விருது பெற்ற இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இங்கு மற்றுமொரு கூடுதல் சிறப்பு, இப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ள இந்திய தயாரிப்பு படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியை மேலும் சிறப்பிக்கும் வகையில், ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு வெளிநாட்டு நடன கலைஞர்கள் நடனமாடியதும், அதற்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததும் பெருமைமிகு தருணங்கள்.
- இதையடுத்து சிறந்த ஆவண குறும்படம் என்ற பிரிவில், Kartiki Gonsalves and Guneet Monga உழைப்பில் உருவான The Elephant Whisperers குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.
சக போட்டியாளர்களாக போட்டியிட்ட Haulout, How Do You Measure a Year?, The Martha Mitchell Effect, Stranger at the Gate ஆகிய குறும்படங்களை பின்னுக்கு தள்ளி ஆஸ்காரை வென்றுள்ள The Elephant Whisperers தமிழ்நாட்டில் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை பற்றியது.
இக்கதையை பொறுத்தவரையில், வனத்தில் தாயை பிரிந்து தத்தளிக்கும் குட்டி யானைகள், முதுமலையில் பராமரிக்கப்படுகின்றன. 2017-ம் ஆண்டு ரகு, 2019-ல் பொம்மி ஆகிய இரு குட்டி யானைகள் முதுமலைக்கு கொண்டு வரப்பட்டன. முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதி பொம்மன், பெள்ளி. இவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே The Elephant Whisperers ஆவணப் படம். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு எளிய தம்பதியரை பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படத்திற்கு உலக அரங்கில் ஆஸ்கர் மேடையில் கௌரவம் கிடைத்திருப்பது, தமிழர்களையும் பெருமையடைய வைத்துள்ளது.
ஆரம்பத்தில் சொன்னது போல, 2 விருதுகளை அள்ளி வந்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து, 2009 ஆண்டு ஆஸ்கர் விழாவை மறக்க முடியாத ஒன்றாகவும், அந்த ஆண்டை இந்திய சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஆண்டாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் மாற்றினார். அதையடுத்து, இந்த 2023 ஆம் ஆண்டை மறக்க முடியாத ஆண்டாக மாற்றியுள்ளனர் RRR மற்றும் The Elephant Whisperers படக்குழுவினர். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..!