எல்லாவற்றையும் கலைநயத்தோடு பார்க்க வேண்டும் என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் தற்போது நடந்துள்ள இந்த தரமான சம்பவம் இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று சொல்லும் அளவுக்கு நடந்துள்ளது . அதாவது, சுவரில் ஒரு டேப் போட்டு ஒட்டப்பட்ட ஒரு வாழைப்பழம் சுமார் 6.2 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞரான மொரிசியோ கட்டெலன் என்பவரது கலைப்படைப்படைப்புதான் இது. அமெரிக்காவின் நியூயார்க் ஏல மையத்தில் சுவற்றில் டக்ட் டேப் போட்டு ஒட்டப்பட்ட இந்த வாழைப்பழம் கடந்த புதன்கிழமை ஏலத்திற்கு வந்துள்ளது.
இதன் ஆரம்ப விலையாக 8,00,000 டாலரில் ஏலம் தொடங்கிய நிலையில் சீனாவை சேர்ந்த கிரிப்டோ கரன்சி தொழிலதிபரான ஜஸ்டின் சன், 6.2 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து, அந்த வாழைப்பழத்தை வாங்கியுள்ளார். இது இந்திய மதிப்பில் ரூ.52.35 கோடி ஆகும். இந்த ஏல விவகாரம் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இந்த படைப்பை உருவாக்கிய கைவினைக் கலைஞர் மொரிசியோ கட்டெலன் வித்தியாசமான படைப்புக்களை உருவாக்குபவர். கடந்த 2016ம் ஆண்டு தங்க கழிப்பறை கோப்பையை உருவாக்கி உலகம் முழுவதும் பிரபலமானார்.
Also Read : சவுதி அரேபியாவில் இன்று தொடங்குகிறது 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம்..!!
அதன்பின் கடந்த 2019ம் ஆண்டு மியாமி நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வாழைப்பழத்தை சுவற்றில் ஒட்டி அதை பார்வைக்கு வைத்தார். தன்னுடைய இந்த படைப்புக்கு ‘காமெடியன்’ என அவர் பெயர் சூட்டினார். அவரது இந்த படைப்பு ரூ.85 லட்சத்து 38 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
ஏலத்தில் எடுக்கப்பட்ட வாழைப்பழம் மக்களின் பார்வைக்காகத் தொடர்ந்து அதே கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்கள், அனைவரும் அந்த வாழைப்பழத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
ஆனால் ஒருநாள் அந்தக் கண்காட்சிக்கு வந்த பிரபல கலைஞர் டேவிட் டதுனா, வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டு விட்டார். ஆனால் இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மீண்டும் அதே இடத்தில் வேறொரு வாழைப்பழம் ஒட்டிவைக்கப்பட்டு, அதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கண்காட்சி முடிந்ததும் அந்த வாழைப்பழம் ஏலம் எடுக்கப்பட்டவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே சுவற்றில் வாழைப்பழத்தை டக்ட் டேப் போட்டு ஒட்டுவது [ காமெடியன்] தனது அறிவுசார் உடைமை என்ற உரிமத்தை கட்டெலன் வாங்கி வைத்தார். இதனால் தற்போது அதேபோன்று சுவற்றில் டக்ட் டேப் போட்டு அவர் ஒட்டிய வாழைப்பழமே தற்போது நியூயார்க் ஏலத்தில் ரூ.52 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
இந்த படைப்பின் சாராம்சம் வாழைப்பழத்தில் இல்லை என்றும் அந்த ஐடியா தான் இதில் விஷயமே என்று கட்டெலன் கூறுகிறார்.