செங்குன்றத்தில் புழல் ஏரியின் அருகே குப்பை கிடங்கில் (garbage dump) நள்ளிரவில் திடீர் தீ விபத்து. மூன்று வாகனங்களில் வந்த வீரர்கள் 4மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் புழல் ஏரிக்கரை அருகில் நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு (garbage dump) வருகிறது.
நேற்றிரவு இந்த குப்பையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மலை போல் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் கொழுந்துவிட்டு எரிய தொடங்கின. இது குறித்து, தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடியும் தீயணைக்க முடியவில்லை.
மேலும், 2 வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 4மணி நேரத்திற்கும் மேலாக போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து குப்பை கிடங்கில் கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
மேலும், புழல் ஏரி கரையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், பேருந்து பயணிகள் புகைமூட்டத்தால் அவதியடைந்தனர்.
இதனையடுத்து, மர்ம நபர்கள் புகைபிடித்து வீசயதில் தீப்பற்றி இருக்க கூடும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.