திருப்பத்தூர் அருகே, வீட்டின் அழைப்பு மணி வேலை செய்யாததால், வீட்டின் உள்ளே செல்வதற்காக பைப் மீது ஏறிச் (climbing) சென்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாயாப்பர் பகுதியில் வசிக்கும் 30 வயதாகும் தென்னரசு என்ற நபர் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு திருமணமாகி புனிதா என்ற மனைவியும் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய இவர் வீட்டின் அழைப்பு மணி வேலை செய்யாமல் இருந்த நிலையில், மனைவிக்கு பலமுறை போன் செய்துள்ளார். ஆனால், அவரது மனைவி போனை எடுக்காத நிலையில், மூன்றாவது மாடிக்கு பைப் வழியாக ஏறிச் (climbing) சென்று உள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்த அவர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.
இந்நிலையில் வெகு நேரமாகியும் கணவன் வரவில்லை என்று புனிதா அவரது அண்ணனுக்கு போன் செய்துள்ளார். இதனையடுத்து, அங்கு வந்த அவர் தென்னரசுவின் செல்போனை தொடர்பு கொண்ட நிலையில் வீட்டின் பின்புறத்திலிருந்து செல்போன் சத்தம் கேட்டதால் அங்கு சென்று பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் தென்னரசு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக அவரை நாற்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.