சென்னையில் நேற்று காலை டப்பிங் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் மாரிமுத்து . தேனி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இவர் பல சூப்பர் ஹிட் படங்ககளில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் .
திரையுலகில் பெயரையும் புகழையும் பெற்ற இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ என்ற சூப்பர் ஹிட் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை டப்பிங் பணியின் போது தீடிர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மாரிமுத்து நேற்று காலை 8.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து சென்னை விருகம்பாக்கம் இல்லத்திற்கு கொடுவரப்பட்ட அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் .
தொலைக்காட்சி தொடரில் ஆதி குணசேகரனாக மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த மாரிமுத்துவின் இறப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
இந்நிலையில் இன்று அதிகாலை நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குடும்ப வழக்கப்படி சடங்குகள் முடிந்தபின், காலை 11 மணிக்கு மேல் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.