நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா சென்னையில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வெற்றி நடைபோட்டு கொண்டிருந்த விஜய் ஆண்டனி சில ஆண்டுகளாக ஹீரோவாகவும் கலக்கி வருகிறார் . இந்நிலையில் இவர் அன்புமகள் மீரா மன அழுத்தம் காரணமாக வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
சிறுமி மீரா சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்ததாகவும், சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது . இந்நிலையில் வழக்கம் போல் பெற்றோருடன் உரையாடிவிட்டு நேற்று இரவு மீரா உறங்கச் சென்றுள்ளார்.
இதையடுத்து விடியற்காலை 3 மணி அளவில் விஜய் ஆண்டனி ( தந்தை ) மீராவின் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் துப்பட்டாவால் பேன் ஊக்கில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் . உடனே வீட்டின் பணியாளர் உதவியுடன் தனது அன்பு மகளை கண்ணீருடன் கீழே இறக்கி உடனே காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு மீராவை பரிசோதித்த மருத்துவர்கள் மீரா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர் . இதையடுத்து தகவல் அறிந்து காவேரி மருத்துவமனைக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
ஆசை ஆசையாக வளர்த்த அன்பு மகள் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது . இதையடுத்து திரையுலகை சேர்ந்த பலரும் விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்திற்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.