நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா தொற்று காரணமாக இரவு உயிரிழந்தார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் நுரையீரல் செயல்படாமல் எக்மோ சிகிச்சை எடுத்து வந்த வித்யாசாகர், தொடர்ந்து எம்ஜிஎம் மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசகருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தாலும், நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே அவரது இறப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. நுரையீரல் பிரச்சனையுடன் கொரோனா பாதிப்பும் இருந்ததால் அவரை காப்பாற்ற மருத்துவர்களால் முடியவில்லை என்று கருதப்படுகிறது.
முன்னதாக மீனாவின் கணவர் வித்யாசாகர், தாய் ராஜ் மல்லிகா, மகள் நைனிகாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள போதும், தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில், நடிகை மீனாவின் கணவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவுக்கு திரை உலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.