அதிமுக – பாஜக கூட்டணியின் முறிவு குறித்து பாஜகவையும் , அக்கட்சியினரையும் பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என முக்கிய நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாஜக உடன் இனி எந்த கூட்டணியும் இல்லை என்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஒருமனதாக முடிவெடுத்தனர். இது தொடர்பான தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்மொழிந்தார்.

இதையடுத்து பாஜக உடனும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் அதிமுக விலகுவதாக அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உருவாக்கப்படும் என அதிமுக மூத்தத் தலைவர் கே.பி.முனுசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜக குறித்து பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என முக்கிய நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. கட்சித் தலைமையால் அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது என தகவல் வெளியாகியுள்ளது.
வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து பொது செயலாளர் இறுதி முடிவு எடுக்கும் வரை அதிமுக நிர்வாகிகள் அமைதி காக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.