வேளாண் தொழில்நுட்ப மேலாளர்களுக்கு 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு மற்றும் பணிநிலைப்பும் மறுக்கப்படுவது பெரும் அநீதி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
தமிழ்நாட்டில் புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து உழவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் 2014-ஆம் ஆண்டு முதல் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் 500-க்கும் மேற்பட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்களுக்கு கடந்த பத்தாண்டுகளாக ஊதிய உயர்வும், பணிநிலைப்பும் வழங்கப்படவில்லை. இது சமூகநீதிக்கும், மனித உரிமைகளுக்கும் எதிரானது.
வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சிறந்த கல்வித்தகுதி கொண்டவர்கள். வட்டார மேலாளர்களுக்கு முதுநிலை வேளாண் அறிவியல் (எம்.எஸ்சி – அக்ரி) படிப்பும், உதவி மேலாளர்களுக்கு இளநிலை வேளாண் அறிவியல் ( பி.எஸ்சி – அக்ரி) படிப்பும் குறைந்தபட்ச கல்வித்தகுதி ஆகும். இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு தொடக்கத்தில் மாத ஊதியமாக முறையே ரூ.25,000, ரூ.15,000 வழங்கப்படும்; ஆண்டுக்கு 10% ஊதிய உயர்வு வழங்கப்படும்; காலப்போக்கில் பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திட்ட வழிகாட்டுதலில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த உறுதிமொழி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.
2018-ஆம் ஆண்டில் வேளாண் துறை இயக்குனரின் செயல்முறை ஆணைப்படி வட்டார தொழில்நுட்ப மேலாளர்களுக்கு 30,000 ரூபாயும், உதவி தொழில்நுட்ப மேலாளர்களுக்கு 25,000 ரூபாயும் மாத ஊதியமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஆண்டுக்கு 10% ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஐந்தாண்டுகள் நிறைவடைந்தும் கூட அந்த ஆணை செயல்பாட்டுக்கு வரவில்லை. 2014-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அதே ஊதியத்தை இப்போது வரை அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
பிற மாநிலங்களில் இதே திட்டத்தின்படி நியமிக்கப்பட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் பணி நிலைப்பும் வழங்கப்பட்டு விட்டது.
வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்களின் கல்வித் தகுதி மற்றும் அவர்களின் உழைப்புடன் ஒப்பிடும் போது அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவு ஆகும். இந்த ஊதியத்தைக் கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் அவர்கள் அவதிப்படுகின்றனர்.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை விதிகளின்படி வட்டார தொழில்நுட்ப மேலாளர்களுக்கு நடப்பாண்டில் குறைந்தபட்சம் ரூ.50,000, உதவி தொழில்நுட்ப மேலாளர்களுக்கு ரூ.40,000 ஊதியம் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியின்படி அந்த அளவு ஊதியம் வழங்குவதுடன், அவர்களுக்கு பணி நிலைப்பும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் .