கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா, வரும் 9 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 18 வரை நடைபெறுகிறது.
திருவிழாவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.இதில், 63 நாயன்மார்கள் மற்றும் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. வரும் 15 ம் தேதி திருத்தேர், 16 ல் 63 நாயன்மார்கள் திருவிழா மற்றும் 18ல் சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.இதையடுத்து, மாநகர காவல் துறை சார்பில், ஒரு இணை கமிஷனர், ஐந்து துணை கமிஷனர் மற்றும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்துவதற்கும், கொரோனா வழிப்புணர்வு என, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், கிழக்கு மாடவீதி வழியாக கோவிலுக்கு உள்ளே செல்ல வேண்டும். தரிசனம் முடிந்து, மேற்கு மாடவீதி விழயாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.
மேலும், குற்ற சம்பவங்களை தடுக்க, நான்கு மாட வீதிகளிலும், நான்கு ‘ட்ரோன் கேமரா’ வாயிலாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்காக, நான்கு உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.கோவிலை சுற்றி மாட வீதிகளில், 32 மற்றும் கோவிலுக்கு உள்ளே 36 என, மொத்தம் 68 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.கோலிலுக்குள் நான்கு, மாட வீதிகளில் ௧௦ கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.கோவிலை சுற்றி இரண்டு தீயணைப்பு வாகனங்கள், பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், விரைந்து மருத்துவமனை கொண்டு செல்ல இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.போக்குவரத்து மாற்றம் :திருத்தேர் நடைபெறும், 15 ம் தேதி காலை, 5:00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரையும், 16 ம் தேதி அறுபத்து மூவர் திருவிழா முடியும் வரையும், கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நாட்களில், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டாது. லஸ் சந்திப்பிலிருந்து ஆர்.கே., மடம் சாலை நோக்கியும்; புனிதமேரி சாலையிலிருந்து -ஆர்.கே., மடம் சாலையில் தெற்கு மாட வீதி நோக்கியும்; கச்சேரி சாலையிலிருந்து- மத்தள நாராயணன் தெரு, சி.பி., கோவில் தெரு நோக்கியும் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.அதேபோல், மாங்கொல்லை தெரு, நடுத்தெரு மற்றும் சுந்தரரேஸ்வரர் தெருவில் இருந்து -கிழக்கு மாட வீதி நோக்கியும்; கிழக்கு சித்ரகுளம் தெருவிலிருந்து வடக்கு சித்ரகுளம் தெரு நோக்கியும், மேற்கு சித்ரகுளம் தெரு, மேற்கு சித்ரகுளம் தெரு, டி.எஸ்.வி., கோவில் தெரு மற்றும் ஆதாம் தெருவில் இருந்து தெற்கு மாடவீதி நோக்கியும்; டாக்டர் ரங்கா சாலையிலிருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை நோக்கியும் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
லஸ் சந்திப்பில் இருந்து அடையாறு மற்றும் மந்தைவெளியை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், லஸ் சர்ச் சாலை, லஸ் அவென்யூ சாலை, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, டாக்டர் ரங்கா சாலை, வாரண் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ஆர்.கே., மடம் சாலை மற்றும் மந்தவெளி வழியாக செல்ல வேண்டும்
மந்தைவெளியில் இருந்து பாரிஸ் நோக்கி செல்லும் வாகனங்கள், வி.கே., அய்யர் சாலை, சிரிங்கேரி மடம் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, வாரண் சாலை, டாக்டர் ரங்கா சாலை, பக்தவச்சலம் சாலை, டி.செல்வா சாலை, லஸ் சர்ச் சாலை, ஆலிவர் சாலை ‘யு’ திருப்பம், முசிறி சுப்பிரமணியம் சாலை மற்றும் பி.எஸ்., சிவசாமி சாலை வழியாக செல்ல வேண்டும்.
கச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தால், சாந்தோம் சந்திப்பிலிருந்து, கச்சேரி சாலை வழியாக லஸ் சந்திப்பை நோக்கி வரும் மாநகர பேருந்துக்கள், சாந்தோம் சந்திப்பில் திருப்பப்பட்டு, காந்தி சிலையை அடைந்து, ஆர்.கே., சாலை, வி.எம்., சாலை மற்றும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக லஸ் சந்திப்பை அடையலாம்.தேவைப்பட்டால், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, பி.எஸ்., சிவசாமி சாலையிலிருந்து லஸ் சந்திப்பு வரை ஒரு வழி சாலையாக போக்குவரத்து மாற்றப்படும்.இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.