மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலை குறித்து மூன்று முக்கிய நாடுகளின் தலைவர்களுடன் அவசரத் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அரக்ச்சி, ஜெய்சங்கர் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ள சூழலில், தற்போதைய கள நிலவரம் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்துள்ளனர். முன்னதாக, கத்தார் பிரதமருடன் பேசியிருந்தார்.
கத்தார் நாட்டின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி உடன்? ஜெய்சங்கர் இன்று மாலை உரையாடினார். இந்த உரையாடலில், அமைதியை நிலைநாட்டுவது மற்றும் போர் தணிப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதேபோல ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஏ.பி. ஜாயித் உடன் ஜெய்சங்கர் ஆலோசித்தார். மத்திய கிழக்கில் மாறி வரும் சூழல், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அதன் சர்வதேச தாக்கங்கள் குறித்து இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
தற்போது ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் மூண்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி இந்தியா ராஜதந்திர நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட OPEC+ நாடுகள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ள நிலையில், இந்தத் தலைவர்களுடனான ஜெய்சங்கரின் பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்தது
