நீண்ட இடைவேளைக்குப் பிறகு 2023 பொங்கலுக்கு அஜித் – விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகி இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாக வாரிசா துணிவா (winner) என ரசிகர்கள் மத்தியில் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில், இன்று எதிர்பார்த்தபடியே திரையரங்குகளில் வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியான நிலையில், இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், இரு படங்களின் விமர்சனங்களையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம் :
வாரிசு :
வாரிசு படத்தை பொறுத்த வரையிலும், டிரைலரில் பார்த்த அதே கதைதான் படத்திலும் இருக்கிறது. தொழிலதிபரான சரத்குமாருக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். ஸ்ரீகாந்த், ஷாம் என இரண்டு மகன்கள் அப்பாவின் வாரிசாக குடும்ப தொழிலை கவனித்துக் கொள்கிறார்கள். இளைய மகன் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுகிறார். தந்தையுடனான மனக்கசப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் விஜய் ஏழு வருடங்களாக தனக்கான அடையாளத்தை பெறுவதற்கு முயற்சி செய்கிறார். மேலும், தொழிலில் சிக்கல் குடும்பத்தில் குழப்பம் என ஏற்பட மீண்டும் வீட்டிற்கே வரும் விஜய் பிரச்சனைகளை சமாளித்து சரத்குமாரிடம் தன்னை எப்படி நிரூபக்கிறார் என்பது தான் வாரிசு படத்தின் கதை.
மேலும், வாரிசு படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தும் யாருக்கும் அழுத்தமான பின்புலம் இல்லாதது இந்த படத்தின் குறையாக இருக்கிறது. படத்தின் அடுத்த காட்சி இதுதான் நடக்கப் போகிறது என எளிதில் யூகிக்க கூடியதாகவும் இருக்கிறது. வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அதனை சரியான இடத்தில் பயன்படுத்தவில்லை. விஜய் ரஷ்மிகாவுடனான காட்சிகள் குறைவாக இருக்கிறது. இப்படி ஒரு பக்கம் இருந்தாலும், குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்து உருவான படம் என்பதால் பொங்கல் பெஸ்டிவல் சூழலுக்கு ஏற்ற படமாக வெளியாகியிருக்கிறது வாரிசு.
துணிவு :
அஜித்தின் துணிவு படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தில், வங்கிகள் கிரெடிட் கார்டு, மியூச்சுவல் ஃபண்ட், பர்சனல் லோன் என்ற பெயரில் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று கூறியிருக்கிறது. மேலும், தனியார் வங்கிகளில் கட்டண கொள்ளை குறித்து விரிவாக அலசுகிறது இந்த படம். வங்கிக் கொள்ளையை திட்டமிடும் அஜித் வங்கியை கொள்ளையடித்தார்களா? ஏன் வங்கியை கொள்ளையடிக்க முடிவு செய்கிறார் என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது துணிவு.
மேலும், அஜித் வங்கியில் கொள்ளை அடிக்கும் காட்சிகள், ஸ்டைலிஷான மேனரிசம் என முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. அஜித் தன்னுடைய முதல் காட்சியிலேயே ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுகிறார். உடல்மொழி, வசன உச்சரிப்பு, ஸ்டைலான நடனம் என அனைத்தும் அட்டகாசம், அமர்க்களம் படத்தில் அமைந்துள்ளது.
இதுவரை பார்க்காத வேறொரு அஜித்தை ரசிகர்கள் என் கண்முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர். துணிவு திரைப்படத்தில் சில நம்ப முடியாத லாஜிக் மீறல்களும் இருக்கின்றன. துப்பாக்கி சத்தம் கேட்டாலும், அவற்றை தவிர்க்க இயலவில்லை. அதே போல் கிளைமாக்ஸ் சண்டை காட்சி சற்று நீளமாக இருக்கிறது போன்ற உணர்வையும் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கிறது துணிவு.
தலையா..? தளபதியா..?
மொத்தத்தில், “வாரிசு”, “துணிவு” இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இரண்டு படங்களும் வழக்கம் போல தங்களுடைய ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. பொங்கல் விடுமுறை ஒரு வாரம் இருப்பதனால் இரண்டு படங்களுக்குமே நல்ல வசூல் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில், வசூலில் பார்த்தால் இரண்டு படங்களுமே பொங்கலுக்கு வின்னர் (winner) தான். ஆனால், விமர்சன ரீதியாகப் பார்க்கும் பொழுது வாரிசு எதிர்பார்த்த குடும்பக் கதையாகவும், சென்டிமென்ட் பார்முலாவாகவும் உள்ளது. ஆனால், அஜித்தின் துணிவு போரடிக்காத காட்சிகளாலும், சோஷியம் மெசேஜ் என ஒருபடி மேலே இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.