புஷ்பா 2 வது பாகத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் அல்லு அர்ஜூன் அறிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் திரை அரங்குகளில் வெளியான திரைப்படம் புஷ்பா. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியானது. புஷ்பா படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. அதிலும் சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் சென்றடைந்தது.
இந்த நிலையில் புஷ்பா படத்தின் 2வது பாகம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 1000 கோடிக்கு வாங்க கோல்ட் மைன் என்ற இந்தி மொழி தயாரிப்பு நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
புஷ்பா 2 திரைப்படத்திலும் ராஷ்மிகாவே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் நடிகர் பகத் பாசில், சுனில், அனுஷ்யா பரத்வாஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப்படத்தில் நடிக்கின்றனர். இதில் வில்லனாக நடிக்கும் ஃபகத் ஃபாசிலுக்கான படப்பிடிப்பு முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் இப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்று தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, இப்படம் 2024 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.