கடும் உழைப்புக்குப் பெயர் போன கொங்கு மக்களை அசிங்கப்படுத்துவதை ஆ.ராஜா நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை கூறிருப்பதாவது :
ஊழல் செய்து மக்கள் பணத்தைத் திருடியவர்கள் ஜம்பமாக வலம் வரும்போது, ஆடு மேய்ப்பது, வெல்லமண்டி வைத்திருப்பது, கூடை பின்னுவது போன்ற விவசாயம் சார்ந்த தொழில்கள், திரு ஆ.ராஜாவுக்குக் கேவலமான தொழில்களாகத்தான் தெரியும்.
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற சொல்லாடல், கலைஞர் கருணாநிதி அவர்கள் பிறக்கும் முன்னரே வழக்கத்தில் உள்ளது என்பதை 2G ராஜாவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
கொங்கு பகுதிக்கு திமுக செய்தது என்னவென்றால், 1970ஆம் ஆண்டு கொங்கு பகுதியில் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கக் கோரி போராடிய மூன்று விவசாயிகளைச் சுட்டுக் கொன்றதுதான்.
கடும் உழைப்புக்குப் பெயர் போன கொங்கு மக்களை அசிங்கப்படுத்துவதை ஆ.ராஜா நிறுத்திக் கொள்ள வேண்டும். யார் முன்னேற்றத்துக்காவது தனது கட்சித் தலைவர் பெயரில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என ஆ.ராஜா விரும்பினால், சைக்கிளில் நீதிமன்றம் சென்ற அவர் உள்ளிட்ட திமுகவினர், இன்று பல ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதியாக இருப்பதற்கு வேண்டுமானால் கருணாநிதி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.