கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் கால்கள் முறிந்த நோயாளிகளுக்கு அட்டைப் பெட்டிகளை வைத்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கட்டுப்போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெப்பாலம் பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணித்த போது இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஊத்தங்கரை அடுத்த நாட்டான்கொட்டாய் பகுதியை சேர்ந்த மீனா (45), பரிமளா (21) , வேம்பரசன் (24) மற்றும் வெப்பலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (28) ஆகிய 4 பேருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து இவர்கள் நான்கு பேரும், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நான்கு பேருக்கும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சையின் பொழுது முறிந்த கால்களுக்கு அட்டை பெட்டிகளை வைத்து மருத்துவர்கள் கட்டுப்போட்டு, அவர்களை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் ரத்தம் கசிந்து அட்டைப்பெட்டிகள் சேதம் அடைந்து, மேலும் காயத்தை பெரிதாக்கும் என்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கால்கள் முறிந்த நோயாளிகளுக்கு அட்டைப் பெட்டிகளை வைத்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கட்டுப்போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.