நாடாளுமன்றத்தில் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மக்களவைத் தோ்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி 2024-25-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் தாக்கல் செய்தாா். இப்போது பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், ஜூலை 23ஆம் தேதி 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது .
இத்தகவலை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற இருக்கிறது.
Also Read : ஆம்ஸ்ட்ராங் படுகொலை : குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – முத்தரசன்!
நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து ஏழாவது முறையாக தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் பிரதமா் மோடி தலைமையிலான மூன்றாவது மத்திய அரசின் பொருளாதாரத் திட்டங்கள் வெளிப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வரும் நாள்களில் இந்தியாவை 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாற்றுவதற்கும், 2047-ஆம் ஆண்டுக்குள் நமது நாட்டை வளா்ச்சயிடைந்த நாடாக மாற்றுவதற்கும் விரைவான சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ளன.
இதுமட்டுமின்றி புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.