சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி அடுத்த இரு நாட்களுக்கு கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மழை கனமழையாக மாறும் பட்சத்தில் தமிழ்நாடு அரசு விடுத்துள்ள சுற்றறிக்கையின் படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.