சென்னை சேப்பாக்கம் (chepauk) மைதானத்தில் புதிய கேலரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கிரிக்கெட் வீரர் தோனி பங்கேற்றார்.
இங்கு உள்ளூர் கிரிக்கெட் போட்டி முதல் சர்வேதேச போட்டிகள் வரை நடைபெற்று வருகிறது. ஐபிஎல்லில் சேப்பாக்கம் (chepauk) மைதானம் சிஎஸ்கே அணிக்கு ஹோம் கிரவுண்ட்டாக உள்ளது.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புனரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த 2011ல் ரூ.190 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடந்த நிலையில், அப்போது புதுப்பிக்கப்படாத பகுதிகள் ரூ.139 கோடியில் புனரமைக்கப்பட்டது.
அண்ணா பெவிலியன், எம்சிசி பெவிலியன்கள் புனரமைக்கப்பட்டது. மேலும் புதிதாக கேலரி, அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. புதிய கேலரிக்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் விழா நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று புனரமைக்கப்பட்ட மைதானத்தை திறந்து வைத்தார். மேலும் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்ட கேலரியையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, சிஎஸ்கே முன்னாள் வீரர் பிராவோ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி, சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
திறப்பு விழாவை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் புதிதாக அமைக்கப்பட்ட பெவிலியன், கேலரியை பார்வையிட்டார். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், எம்எஸ் தோனி, பிராவோ உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.
புதுப்பிக்கப்பட்ட இந்த மைதானத்தில் வரும் 22ஆம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.